By.Rajah.துப்பாக்கி, போடா போடி என்ற பொழுதுபோக்கு சரவெடிகளின் சப்தங்களுக்கு மத்தியில் தங்கர் பச்சானின் அம்மாவின் கைப்பேசி காணாமல் போய்விட்டது. |
இருப்பினும் இயக்குனர் தங்கர் பச்சானின் அரிய படைப்பு என்று நினைத்துக்கொண்டு
அம்மாவின் கைபேசி தியேட்டர் வாசலை மிதிக்கும் ரசிகர் பெருமக்களுக்கு பேராபத்து
இருக்கிறது. ஒன்பது பிள்ளைகளைப் பெற்றத் தாய் தன் கடைசி மகன் மீது வைத்திருக்கும் அளவுகடந்த பாசத்தை மிகவும் நீளமாகவும் உருக்கமாகவும் சொல்லிருக்கிறார் தங்கர்பச்சான். வீட்டின் கடைசி மகன் என்பதால் அம்மாவுக்கு செல்லப்பிள்ளையாகவே வளர்கிறார் அண்ணாமலை என்கிற சாந்தனு. கொடுக்கப்பட்ட காட்சிகளுக்கு கெட்டிக்காரத்தனமாக நடித்து இந்த படத்தில் நல்ல பெயர் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றும் ஊதாரித்தனமாக வாலிபராக வலம் வருகிற சாந்தனுவிற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு தொடக்கம் முதலே இருக்கிறது. அதனால் வீட்டின் மற்ற அண்ணன்களும் அக்காவும் சாந்தனுவை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இருப்பினும் தன் மாமன் மகளான செல்வி என்கிற இனியாவை காதலிக்கும் சாந்தனு, அவரை திருமணம் முடிக்க வேண்டுமென்பதற்காக பொருப்புள்ள பிள்ளையாக மாறி தன் மாமாவிடமே வேலைக்கு சேர்கிறார். இந்த நேரத்தில் வீட்டில் ஒரு விஷேஷம் நடக்க அங்கு தங்க நகை காணாமல் போக, அதை சாந்தனுதான் எடுத்திருப்பார் என்று எல்லோரும் சந்தேகப்பட, சாந்தனுவை அடித்து உதைத்து வீட்டைவிட்டே துரத்திவிடுகிறார் அவர் அம்மா. பல இடங்களில் வேலைக்கு போய் கஷ்டப்படுகிறார். இருப்பினும் சில நல்ல முதலாளிகள் அவருக்கு கிடைப்பதால் நன்றாக சம்பாதித்து வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைகிறார். அதுவரை வீட்டுக்கு போகாமலும் தன் அம்மாவை பார்க்காமலும் இருந்த சாந்தனு, தன் அம்மவுடன் பேச ஒரு கைபேசி வாங்கி அம்மாவுக்கு அனுப்புகிறார். அம்மாவும் மகனும் கைபேசியில் பாசத்தை பரிமாறிக்கொள்கிறார்கள். தான் வேலை செய்யும் இடத்தில் உண்மையாக இருப்பதால், எதிரிகளையும் சம்பாதித்து கொள்கிறார் சாந்தனு. அந்த எதிரிகள் சாந்தனுவை தீர்த்துக்கட்ட துடித்துக் கொண்டிருக்க, இறுதியாக அம்மாவும் மகனும் சந்தித்துக்கொள்கிறாரார்களா என்ற கேள்வியை நோக்கி நகர்கிறது க்ளைமாக்ஸ். தன் நாவலை முழுமையாக எடுக்க வேண்டுமென்பதற்காக பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தி படம் முடிகிறவரை புலம்ப வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தங்கர்பச்சான். ’அம்மாவின் கைபேசி’ அண்ணாமலையின் கதையாக இல்லாமல் பிரசாத்தின் (தங்கர் பச்சான் கதாப்பாத்திரம்) கதையாக இருப்பது எதிர்பார்க்காத ஏமாற்றம். இன்னும் சொல்லப்போனால் அவர் நடித்திருக்கும் அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு நீளமான காட்சிகள் தேவையில்லை என்றே தோன்றுகிறது. படத்தில் ஒரே ஒரு அறுதலான விஷயம் தன் வேலையை மிகச்சரியான விதத்தில் செய்திருக்கிறார் சாந்தனு. நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அம்மாவின் பாசத்துக்கு அடங்கி நடக்கும்போதும், இனியாவுக்கு நச்சுன்னு ஒரு இச்சு வைக்கும் போதும், எதிரிகளிடம் சிக்கிகொண்ட போதும், ரொம்ப தெளிவான நடிப்பு. இனியா, கொடுத்த காட்சிகளை சும்மா அல்வா மாதிரி சாப்பிட்டிருக்கிறார். குறைவான காட்சிகள் என்றாலும், நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மாவாக நடித்திருக்கும் ரேவதி கிராமத்துத்தாயை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். அண்ணாமல... அண்ணாமல... என்று மகனிடம் பேசும் வசன உச்சரிப்பிலும் கூட பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கைபேசியில் பேசும்போதெல்லாம் டவர் கிடைக்காமல் சுவர் மேல் ஏறி நின்று பேசும் வேடிக்கையான காட்சிகள் ரசிக்கவைத்தன. கொமெடி என்ற பெயரில் தங்கர்பச்சான் செய்த சேஷ்டைகள் மிகவும் கோபப்படுத்துகிறது. அம்மாவின் பாசம் அளக்க முடியாதது, உலகத்தில் அம்மாவுக்கு நிகர் யாருமில்லை, கண்ணில் தெரியும் கடவுள் அம்மா என்ற கருத்துகளை உணர்த்தும் படைப்பாக இருக்கிறது அம்மாவின் கைபேசி. இருப்பினும் தங்கர்பச்சன் சாருக்கு ரசிகர்களின் வேண்டுகோள், அழகி மாதிரியான அழியாத ஒரு படைப்பை மீண்டும் எடுக்க முடிந்தால் எடுங்க, இல்லைன்னா ஆளவிடுங்க என்பதே ஆகும். கதாநாயகன்: சாந்தனு பாக்யராஜ் கதாநாயகி இனியா இசை ரோகித் குல்கர்னி இயக்கம்: தங்கர் பச்சான் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக