சனி, 10 நவம்பர், 2012

கார்த்தி ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் "அலெக்ஸ் பாண்டியன்"

By.Rajah.கார்த்தி நடித்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகிற படம் "அலெக்ஸ் பாண்டியன்" தான்.
"பருத்தி வீரன்" முதல் "சகுனி" வரை கார்த்தி வெளியிட்ட விதம் வேறு. இப்படத்தில் வெளிப்படும் விதம் வேறு.
இதில் முழுக்க முழுக்க ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். அதுவும் சாதாரண கார்த்தியாக அல்ல... விஸ்வரூபம் எடுத்து வெளிப்படுகிறார்.
"சிறுத்தை", "சகுனி" படங்களில் கார்த்தியின் நண்பனாக வந்து கலக்கிய சந்தானம், இப்படத்தில் எதிரியாக வருகிறார்.
இருவருக்கும் எப்போதும் ஆகவே ஆகாது. சந்தானம் வீட்டில் சொந்தக்காரராக வந்து தங்கும் கார்த்தியை விரட்ட சந்தானம் போடும் திட்டங்கள் எல்லாமே பணால் ஆக... கார்த்திக்கு சாதகமாக முடியும் ஒவ்வொரு கட்டமும் வயிற்று வலிக்கு உத்திரவாதமுள்ள காட்சிகள்.
கொமெடி பாதி.. அதிரடி பாதி..
சுராஜ் இயக்கும் படங்களில் கொமெடி தூக்கலாக இருக்கும். இதில் ஆக்ஷன் கொடியையும் சம உயரத்தில் தூக்கிப் பிடித்துள்ளார்.
ஆக, சிரிப்பு மத்தாப்பும் சீறும், ஆக்ஷன் அணுகுண்டும் வெடிக்கும் எனலாம்.
கதை என்ன..?
யார் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாத ஜாலியான பொறுப்பில்லாத இளைஞன்தான் கார்த்தி.
அவரை சந்தானம் ஏன் தன் பக்கத்தில் சேர்க்க மறுக்கிறார். விருந்தாளியாக வந்தவரை விரட்டியடிக்கத் துடிப்பது ஏன்? பொறுப்பில்லாத இந்த இளைஞனுக்கு பெரிய பெரிய எதிரிகள் எப்படி உருவாகிறார்கள் அவர்களை கார்த்தி எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.
அனுஷ்கா எப்படி கார்த்தியின் ஆக்ஷன் ஜோதியில் கலக்கிறார் என்பது தனியான சுவாரஸ்யம்.
ஒரு வெற்றிகரமான நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அயராது உழைப்பவர் கார்த்தி. ஓடும் ரயில் மீது ஏறி சண்டை போடும் காட்சிகளில் அபாயம் பற்றிக் கவலைப்படாமல் அசத்தியுள்ளார். தன் தகுதியை உயர்த்திக் கொள்ள கடுமையாக உழைத்திருக்கிறார்.
கவர்ச்சிகரமான நாயகியாக வலம் வரும் அனுஷ்கா இதில் ஆக்ஷன் காட்சிகளிலும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.
காலை 7.00 மணிக்கே படப்பிடிப்பு இடங்களுக்கு ஆஜராகி காலந்தவறாமையைக் கடைப்பிடித்துள்ளார். உடைமாற்ற கேரவன் போகாமல் செட்டுக்குள்ளேயே உடைமாற்றி நேரத்தை சேமித்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளதை யூனிட்டே பாராட்டுகிறது.
பிற நடிகர்கள்...
கார்த்தி அனுஷ்கா தவிர சந்தானம் முக்கிய பங்கு வகிக்கிறார். வேட்டைக்காரராக மனோபாலா ஒரு பக்கம் பிரித்து மேய்கிறார். பிரதான வில்லனாக மிலிந்த் சோமன், பிரமுக வில்லன்களாக சுமன், மகாதேவன் நடித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு இடங்கள்
சென்னை, பாண்டிச்சேரி, சாலக்குடி, ஹைதரபாத், விசாகப்பட்டினம், மைசூர் என தென்னிந்தியாவிலும் பல இந்தியாவில் மும்பையிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
ஓடும் ரயிலின் கூரையிலிருந்தும் கார்த்தியை வில்லனின் ஆட்கள் ஹெலிகப்டரில் துரத்தும் காட்சி படமாக பல இடங்கள் தேடி கர்நாடகாவில் மைசூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் படமாகியுள்ளது.
படத்துக்காக ரயில் ஒன்றை தினசரி வாடகை ஏழு லட்ச ரூபாய் வீதம் 10 நாட்களுக்கு கொடுத்து காட்சிகளை எடுத்துள்ளார்கள்.
கலை இயக்குநர் பிரபாகர் அமைத்த 12 செட்களிலும் பாடல்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இசை... பாடல்கள்....
படத்தில் ஐந்து பாடல்கள் வாலி, விவேகா, பா.விஜய் எழுதியுள்ளார்கள். இசையமைத்துள்ளவர் தேவி ஸ்ரீ பிரசாத், வணிக சூத்திரங்களை அறிந்து வட்டியும் முதலுமாக இசையை வாரி வழங்கியுள்ளார்.         சண்டைக்காட்சிகள்...
இப்படத்தில் இடம்பெறும் ரயில், ஹெலிகப்டர், கார் துரத்தல் காட்சிகள் ரசிகர்களை சிலிர்க்க வைக்கப் போவது உறுதி. ஆக்ஷன் விருந்தை உருவாக்கியிருப்பவர் கணேஷ்.
பிற தொழில் நுட்பக் கலைஞர்கள்...
ஒளிப்பதிவு- எஸ். சரவணன்D.F.T., கலை - பிரபாகர், பாடல்கள்- பா.விஜய், விவேகா, நடனம் - ராஜு சுந்தரம், ராபர்ட், சிவசங்கர், படத்தொகுப்பு- ப்ரவீன் கே.எல். ஸ்ரீகாந்த், தயாரிப்பு மேற்பார்வை- ஆண்டனி சேவியர். ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா வழங்க இணை தயாரிப்பு- SR பிரகாஷ்பாபு, SR பிரபு, தயாரிப்பு- K.E ஞானவேல் ராஜா.
"அலெக்ஸ் பாண்டியன்" இறுதிக்கட்ட பணிகளில் மெருகேறி வருகிறது. பொங்கல் வெளியீடாக வெளிவரவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக