விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கி நேற்று இரவு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து விஸ்வரூபம் படம் இன்று ரிலீஸ் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களிலும் ரசிகர்கள் திரண்டனர். எழும்பூரில் உள்ள ஆல்பட் தியேட்டரில் நேற்று நள்ளிரவில் பிரமாண்டமான விஸ்வரூபம் பேனரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் அருகில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையும், பாரும் தப்பியது.
எரிக்கப்பட்ட விஸ்வரூபம் பேனர் வெளியில் தெரியாத அளவுக்கு சுருட்டி மடக்கி போடப்பட்டிருந்தது. எழும்பூர் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதற்கிடையே இன்று காலையில் அண்ணாசாலையில் உள்ள தேவி தியேட்டர் முன்பு மத்திய சென்னை மாவட்ட கமல் ரசிகர் மன்ற பொறுப்பாளர் ரமேஷ் மற்றும் ரசிகர்கள் விஸ்வரூபம் படத்துக்கான பேனரை காலை 6 மணி அளவில் வைத்துள்ளனர். 7 மணி அளவில் அங்கு வந்த ஒரு கும்பல் பெட்ரோல் ஊற்றி பேனரை எரித்து விட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தியேட்டரின் மெயின் வாசல் அருகில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
விஸ்வரூபம் படத்தின் பேனர் தீ வைத்து எரிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் தேவி தியேட்டர் முன்பு கமல் ரசிகர்களும் திரண்டனர். அவர்கள் பேனர் எரிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அனைவரிடமும் கமல் இருப்பது போன்ற பேனரை இன்று காலையில்தான் நாங்கள் வைத்தோம். கடந்த 1 வாரமாக அமைதியாக இருந்த நாங்கள் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னர்தான் இந்த பேனரை வைத்துள்ளோம். ஆனால் அதற்குள் அதனை எரித்து விட்டனர்.
இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். பொதுமக்கள் அனைவரும் கமலஹாசனுக்கு ஆதரவாக உள்ளனர். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் விஸ்வரூபம் படம் எப்போது வரும் என்று கேட்டுக்கொண்டே உள்ளனர். இதுபோன்று எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அமைதியான வழியிலேயே கமலின் பாணியில் எங்கள் செயல்பாடுகள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேவி தியேட்டர் முன்பு ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால் அவர்களை பார்த்து விட்டு பொதுமக்களும் அங்கு கூடினார்கள். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
பேனர் தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கேட்டபோது, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தனர்.
தேவி தியேட்டர் முன்பு விஸ்வரூபம் பேனரை தீ வைத்து எரித்ததற்கான எந்தவித சுவடும் தெரியவில்லை. அவசரம் அவசரமாக அங்கு வந்த போலீசார் தீ வைத்து எரிக்கப்பட்ட பேனரை எடுத்து மறைத்து விட்டனர். மேலும் அந்த தியேட்டர் முன்பு கிடந்த கரித்துகள்களையும் உடனடியாக அப்புறப்படுத்தி விட்டனர். இதனால் பேனர் வைத்த இடம் துடைத்து வைத்த இடம்போல காணப்பட்டது. பேனர் வைக்கப்பட்ட இடத்தின் அருகில் உள்ள சுவற்றில் மட்டும் தீ வைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் தென்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக