தமிழகத்தில் காவிரிப் படுகையின் கடைமடைப் பகுதியில் கருகும் பயிர்கள், விவசாயிகளின் உயிர்களைப் பறிக்க ஆரம்பித்து இருக்கின்றன. இந்திய அரசின் தொடர் அலட்சியத்தால், கொந்தளிக்கிறது காவிரி. ஒரு விவசாயியைவிட வேறு யார் இந்தப் பிரச்னையைப் பற்றி விரிவாகப் பேச முடியும்? விவசாயப் பிரச்னைகளுக்கான போராட்டங்களில் முதல் வரிசையில் நிற்கும் போராளியான ஆறுபாதி கல்யாணத்திடம் பேசினேன்.
““எவ்வளவோ பிரச்னைகளை எதிர்கொண்டவர்கள் நம் விவசாயிகள். ஆனால், இன்றைக்கு ஒரு போகம் போய்விடும் என்ற அச்சமே கிடுகிடுவென உயிர்களைச் சாய்க்கிறது. என்ன காரணம்?”“
““கூரத்தாங்குடி ராஜாங்கம், மகிழி செல்வராஜ், ஆண்டாங்கரை அப்துல் ரஹீம்... இவங்க குடும்பங்களை நாம நேர்ல போய்ப் பார்த்தோம்னா, இதுக்கான பதில் எவ்வளவு குரூரமா இருக்கும்கிறது தெரியும். விவசாயிக்குக் கடைசி நம்பிக்கையும் இப்ப போக ஆரம்பிச்சுட்டுங்க. அதுதான் காரணம். விவசாயம் கிறது இன்னைக்கு சாபமா மாறிப்போச்சு. நூத்துக்குத் தொண்ணூறு விவசாயி கடன் வாங்கித்தான் விவசாயம் செய்றான். ஒரு போகம் போச்சுன்னா, போட்ட முதல் மட்டும் போகலை; கடனும் வட்டியும் அவனைத் துரத்துது. கை கொடுக்கவும் ஆள் இல்லை; எதிர்காலமும் நம்பிக்கை தரலை. வீட்டுல அடுப்பு எரியணும். இன்னைக்கு உள்ள விலைவாசி யில, மாசச் சம்பளக்காரவங்களுக்கே ஒரு மாசம் வேலை இல்லைன்னா, வீடு இருண்டுடும். இந்தச் சூழல்ல ஒரு போகமே போச்சுன்னா, விவசாயி என்ன செய்வான்?”“
““காவிரி, முல்லைப் பெரியாறு என்று எல்லாப் பிரச்னைகளிலும் தமிழகத்தின் கை எப்போதுமே ஒடுங்கியே இருக்க என்ன காரணம்?”“
““நம்ம ஆளுங்களுக்கு வரலாறோ, நம்மளோட உரிமைகளோ முழுமையாத் தெரியலீங்க. அதுதான் எல்லாத்துக்கும் முதல் காரணம். காவிரியையே எடுத்துக்குங்க. காவிரிப் பிரச்னைன்னா ஏதோ, வெறும் காவிரி டெல்டா மாவட்டங்களோட பிரச்னையாத்தானே இங்கே பெரும்பான்மை ஆட்கள் பார்க்குறாங்க? தமிழ்நாட்டோட நெல் உற்பத்தியில, மூணுல ஒரு பகுதியை காவிரி டெல்டாதான் தருது. தவிர, தமிழ்நாடு முழுக்க அஞ்சு கோடி மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாவும் காவிரி இருக்கு.சென்னையில இருக்கிறவங்களுக்கு லாரியில வர்ற தண்ணியும் கேன்ல வர்ற தண்ணியும் எங்கே இருந்து வருது? ராமநாதபுரம் வரைக்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துல தண்ணி போகுதே... எங்கே இருந்து போகுது? தமிழ்நாட்டுல இருக்கும் ஒவ்வொருத்தரோட அன்றாட வாழ்க்கையிலும் அவங்களுக்கே தெரியாமக் கலந்து இருக்குது காவிரி. இன்னைக்கு அது உற்பத்தி ஆகும் குடகு, கர்நாடகத்துல இருக்கலாம். ஆனா, முன்ன நம்மள ஒட்டி இருந்த பகுதி. ரெண்டாயிரம் வருஷமா காவிரியை வெச்சு சாகுபடி பண்றவங்க நாம. நதி நீர் உரிமையைப் பொறுத்தவரைக்கும், பாரம்பரியமா நீரைப் பயன்படுத்துறவங்களுக்குத்தான் முதல் உரிமை. இது சர்வதேச அளவிலான நடைமுறை. இந்த உண்மைகளை ஒவ்வொரு தமிழனும் உணரணும். அரசியல் கட்சிகள் இந்த மாதிரி வாழ்வாதாரப் பிரச்னைகளிலாவது பேதங்களை மறந்து ஒண்ணு சேர்ந்து நிக்கணும். அப்போதான் ஒடுங்கி இருக்கும் கை ஓங்கும்.”“
““தமிழகம் - கர்நாடகம்... இரு தரப்பு விவசாயிகளின் நலன்களும் பாதிக்கப்படாமல், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாதா?”“
““மூணு தீர்வுகள் இருக்கு. முதல் தீர்வு, இரு பக்கமும் தங்களோட தேவைகளைக் குறைச்சுக்கிட்டு, அடுத்தவங்க நிலைமையை மதிச்சு நடந்துக்கிறது. நாம எவ்வளவோ இழந்திருக்கோம். இறுதித் தீர்ப்பே நமக்குப் பெரிய இழப்புதான், தெரியுமா? இரண்டாவது, கர்நாடகத்தைச் சேர்ந்த நீர்வள நிபுணர் பி.எஸ்.பவானிசங்கர் சொன்னது... கர்நாடகத்துல மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி உபரியாக் கடல்ல கலக்கும் 2,000 டி.எம்.சி. தண்ணீரில், நேத்ராவதி, அதைச் சுத்தியுள்ள ஆறுகள்லேர்ந்து உபரியா போற 200 டி.எம்.சி. தண்ணீரை ஹேமாவதி அணைக்கு நீரேற்றுத் திட்டங்கள் மூலமாத் திருப்புறது. இதன் மூலமா கர்நாடகத் தோட நீர்த் தேவை யைப் பெரிய அளவில் தீர்க்கலாம். மூணாவது தீர்வு, கர்நாடகம் அவங்க மண்ணுக்கு ஏத்த பயிர் சாகுபடிக்கு மாறணும். இன்னைக்கு காவிரித் தண்ணியைவெச்சு கர்நாடகம் விவசாயம் செய்யும் மண் மானாவாரிப் பயிர்களுக்கு ஏத்தது. ஆனா, அங்கே போய் தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல்லையும் கரும்பையும் பயிர் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. கிட்டத்தட்ட இது வீம்புக்குச் செய்றதுதான். இந்த வீம்பை விட்டுட்டு இயல்பான விவசாயத்துக்குக் கர்நாடகம் மாறணும்.”“
““காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்தின் தவறுகள் என்ன? நம்முடைய தவறுகள் என்ன?”“
““ஒரு தமிழனா இல்லை... ஒரு பொதுவான மனுஷனாவே சொல்றேன். தமிழ்நாட்டு மேல எந்தத் தப்பும் இல்லீங்க. கர்நாடக அரசு தன்னோட சுயநலனுக்காகத் திட்டம் போட்டு, அவங்களோட தேவையைப் பெருக்குது. அது தான் இங்கே நடக்கும் முக்கியமான தவறு. 1901-ல மைசூர் மாகாணத்தோட சாகுபடிப் பரப்பு எவ்வளவு தெரியுமா? 1.11 லட்சம் ஏக்கர். இன்னைக்கு எவ்வளவு பரப்பளவுக்குத் தண்ணீர் கேட்குறாங்கனு தெரியுமா? 27.28 லட்சம் ஏக்கருக்குக் கேட்குறாங்க. இதுல கொடுமை என்னன்னா, 1991-ல் காவிரி நடுவர் மன்றத்துல, தன்னுடைய சாகுபடிப் பரப்பு 11.2 லட்சம் ஏக்கர்னு கர்நாடக அரசு சொன்னப்போ, “இதுக்கு மேல் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கக் கூடாது; தண்ணீர்ப் பற்றாக்குறை மேலும் தீவிரமாகும்”னு கர்நாடகத்துக்குக் கட்டுப்பாடு விதிச்சது நடுவர் மன்றம். ஆனா, இறுதித் தீர்ப்பில் அதே நடுவர் மன்றம் கர்நாடகத்துக்கு 18.85 லட்சம் ஏக்கருக்குத் தண்ணீர் ஒதுக்கிச்சு. மறுபக்கம், தமிழ்நாட்டோட நிலைமை என்ன தெரியுமா? ஆரம்பத்துல வருஷத்துக்கு 378 டி.எம்.சி. வந்துட்டு இருந்துச்சு. காவிரி நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பு அதை 205 டி.எம்.சி. ஆக்குச்சு; இறுதித் தீர்ப்பு 192 டி.எம்.சி. ஆக்கிடுச்சு. மோசமான இழப்புதான். ஆனா, அதுக்கே பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கோம்.”“
““அரசியல் சார்ந்து இந்தப் பிரச்னையில் யாரைக் குறை சொல்வீர்கள்?”“
““மத்திய அரசாங்கத்தை. ஏன்னா, ஒரு மாநில அரசாங்கம் குறுகிய நோக்கத்தோட செயல்படுறது சகஜம். ஆனா, மத்திய அரசாங்கம் அதுக்கு அப்பாற்பட்டு, எல்லாத்துக்கும் நடுநிலைமையோட நடந்துக்கணும். ஆனா, கொஞ்சம்கூட அந்தப் பொறுப்பு இல்லாம நடந்துக்குது மத்திய அரசாங்கம். பல லட்சம் விவசாயிகளோட வாழ் வாதாரப் பிரச்னையைத் தீர்க்கத்தான் காவிரி ஆணையம்னு ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுச்சு. ஆனா, ஒன்பது வருஷமா அது கூடவே இல்லைன்னா, எவ்வளவு பெரிய பொறுப்புக்கெட்டத்தனம்? இந்தியாவுல உள்ள எல்லா நதி களையும் சேர்த்து நம்மளோட நீராதாரம் 65,450 டி.எம்.சி. இதுல 17,500 டி.எம்.சி. தண்ணீர்தான் பயன்படுத்தப்படுது. கிட்டத்தட்ட 47,000 டி.எம்.சி. கடல்லதான் கலக்குது. நாளுக்கு நாள் உணவுத் தேவையும் தண்ணீர் தேவையும் அதிகரிச்சுட்டு இருக்கும் சூழல்ல எவ்வளவு தண்ணியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர்றோமோ, அவ்வளவுக்குப் பிரச்னை தீரும். ஆனா, அரசாங்கம் இந்த விவகாரத்தை அலட்சியப்படுத்துது. நீங்க எழுதிவெச்சுக்குங்க... தண்ணீரால்தான் இந்தியா சிதையும்!”“
““சரி, இந்தியா சிதையும் என்கிறீர்களே... அப்படிச் சிதைந்தால், கர்நாடகத்திடம் எப்படித் தண்ணீர் கேட்பீர்கள்? அப்போதும் அவர்களை அண்டித்தானே நாம் வாழ வேண்டும்?”“
““மொழிவாரி மாநிலங்களைப் பிரிச்சப்போ, முல்லைப் பெரியாறு பகுதியை கேரளத்தோட பகுதியா வரையறுத்தாங்க. அப்போ எல்லோரும் எதிர்த்தப்ப, “கேரளமும் இந்தியாவுலதான் இருக்கு”ன்னு சொன்னார் காமராஜர். நம்ம என்னைக்கும் அந்த உணர்வோடதான் இருக்கோம். ஆனா, மத்தவங்களுக்கும் அந்த உணர்வு வேணும். தேசியம்... தேசியம்னு சொல்லி நம்ம மட்டும் எல்லாத்தையும் இழந்துட்டு நிக்க முடியாது. தமிழ்நாட்டோட எல்லையைக் குமரி யில் இருந்து குடகு வரைக்கும் மறுவரையறை செய்யச் சொல்லுங்க. பழந்தமிழர் பகுதிகளை ஒண்ணா நிர்மாணம் செய்யச் சொல்லுங்க. நம்ம பிரச்னையை நாமளே பார்த்துக்கலாம்.”“
““இஸ்ரேலியர்கள் சொல்கிறார்கள்... “உலகிலேயே தண்ணீரை அதிகம் வீணடிப்பது இந்திய விவசாயிகள்தான்” என்று. நீர் மேலாண்மைபற்றி என்ன நினைக் கிறீர்கள்?”“
““வீணடிக்கிறோம்னு சொல்ல முடியாது. ஆனா, நீர் சிக்கனம் தேவைங்கிறதை ஏத்துக்கிறோம். நீர் மேலாண்மை தொடர்பா நிறைய நாம கத்துக்க வேண்டி இருக்கு. ஆனா, இந்த விஷயத்துல விவசாயிகளைக் குத்தம் சொல்ல முடியாது. அரசாங்கம்தான் தொலைநோக்கத்தோட அதுக்கேத்த மாதிரி திட்டம் போடணும். காவிரிப் படுகையில் ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், குட்டைகள் இருந்துச்சு. குடிமராமத்து முறை வழக்கொழிஞ்சதோட இதுல பெரும்பாலானது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அழிஞ்சது. அரசாங்கம் ஆழ்குழாய் விவசாயத்தை ஆதரிச்சதே தவிர, நீர்நிலைகள், காவிரி நீர்ப் பாதையைப் புனரமைச்சு நீராதாரத்தைப் பெருக்கணும்னு நினைக்கலை. இப்போ விவசாயிகளே ஒரு திட்டத்தை முன்மொழியுறோம். “நிலம் குளம் களம் வனம் = வளம்”னு அதுக்குப் பேர். அதாவது, ஒவ்வொரு பத்து ஏக்கர் விவசாய நிலத்திலேயும் ஒரு ஏக்கர்ல குளம் அமைக்கணும். அதுல எடுக்குற மண்ணைவெச்சு ரெண்டு ஏக்கர் நிலத்தை மூணு அடி உயரத்துக்கு மேடாக்கிக் களம் அமைக்கணும். அதுல பல வகை மரங்கள் வளர்க்கிறது. மிச்ச நிலத்துல பயிர் விவசாயம். ஆனா, இதுக்கான முயற்சி களை அரசாங்கம்தான் முன்னெடுக்கணும்.”“
““விவசாயத்தில் நஷ்டத்தைக் குறைக்க, இயற்கை வேளாண்மை ஒரு நல்ல வழி இல்லையா?”“
““எல்லாரோட விருப்பமும் அதுதான். ஆனா, ஒரு விவசாயி ரசாயனப் பூச்சிக் கொல்லியைக் கைவிடணும்னாகூட, உடனே விட்டுட முடியும். ஆனா, ரசாயன உரத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுட முடியாது. ஏன்னா, மண் அவ்வளவு தளர்ந்துபோச்சு. அதனால, படிப்படியா அந்த மாற்றம் நடக்கணும். ஒரு பெரிய புரட்சியா அது நடக்கணும். அதுக்கு அரசாங்கம் மொதல்ல மனசுவைக்கணும்.”“
““ஒரு விவசாயியாகச் சொல்லுங்கள்... விவசாயத்தின் மறுமலர்ச்சிக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?”“
““இந்தியாவுல இன்னைக்கும் 60 சதவிகிதம் மக்கள் விவசாயத்தை நம்பித்தான் இருக்காங்க. ஆனா, மத்திய - மாநில அரசுகள் வேளாண் உற்பத்திக்காக ஒதுக்குற நிதி எவ்வளவு தெரியுமா? ரெண்டு சதவிகிதம்தான். இந்தியாவுல புயல், வெள்ளம், வறட்சினு வருஷா வருஷம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விளைபொருட்கள் நாசமாகுது. ஆனா, தேசியப் பேரிடருக்குனு அரசாங்கம் ஒதுக்குற நிதி 4,000 கோடியைத் தாண்டலை. பின்னே எப்படி விவசாயிகளுக்கு உதவ முடியும்?
மொதல்ல, விவசாயத்துக்கு 10 சதவிகிதம், விவசாயிகளுக்கு 10 சதவிகிதம்னு நிதி ஒதுக்கணும். விவசாயத்துக்குன்னு தனி பட்ஜெட் போடணும். தேசிய விவசாயிகள் ஆணையப் பரிந்துரைப்படி, எல்லா விவசாய விளைபொருட்களுக்கும் மொத்த உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் கூடுதல் விலை நிர்ணயிக்கணும். விவசாயக் கடன்களை 4 சதவிகித வட்டியில் கொடுக்கணும். சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்களை உருவாக்கணும். ஒவ்வொரு மாவட்டத்துலயும் விளைவிக்கும் விளைபொருட்களை அங்கேயே மதிப்புக்கூட்டப் பட்ட பொருட்களா மாத்திடும் வகையில, வேளாண் தொழிற்சாலைகள் அமைக்கப்படணும். விவசாயிகளை அதில் பங்குதாரர்களா ஆக்கணும். நதி நீர் விவகாரத்தைப் பொறுத்த அளவில், நதிகளைத் தேசியமயமாக்கணும். நதிநீர் ஒதுக்கீடு தன்னாட்சி அதிகாரம் உள்ள அமைப்புகிட்ட ஒப்படைக்கப்படணும். நதி நீரை உரிய காலத்தில் விடுவிக்கிற பொறுப்பு, சூழலுக்கு ஏத்த மாதிரி பகிர்ந்து தர்ற பொறுப்பு ராணுவத்துக்கிட்ட இருக்கணும்!”“
0 கருத்துகள்:
கருத்துரையிடுக