கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்ததால், பட வாய்ப்புகளை இழந்து ஓரங்கட்டப்பட்டுள்ள நடிகர் வடிவேல், நாளை வைகோ முன்னிலையில், ம.தி.மு.க.,வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் திரைப்பட உலகில் தனக்கென்று ஒருபாணியை வகுத்துக் கொண்டு, ரசிகர்கள் மத்தியில் காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. கடந்த, 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
அதிலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியதால், அவருடைய பேச்சுக்கும், பிரசாரத்துக்கும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. அந்த தேர்தலில், தி.மு.க., தோல்வியை தழுவியது. அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது. தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்த ஒரே காரணத்தால், பட வாய்ப்புகள் அறவேயின்றி, சினிமா துறையிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலைக்கு, வடிவேலு தள்ளப்பட்டார். இதற்கிடையே, எதிர் எதிர் துருவமாக இருந்த தி.மு.க., - தே.மு.தி.க., ஒரே அணியில் வர வாய்ப்புள்ளதாக வெளியான தகவல், வடிவேலுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் வடிவேலு, நாளை ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில், அக்கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை திருச்சியில், "நாடாளுமன்றத்தில் வைகோ என்ற நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. இதில், ம.தி.மு.க.,வுக்கோ, வைகோவுக்கோ எவ்வித சம்பந்தமும் இல்லாத நடிகர் வடிவேலு பங்கேற்கிறார் என்று அழைப்பிதழில் பெயர் போடப்பட்டுள்ளது. ஆகையால் அவர், ம.தி.மு.க.,வில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதை, அக்கட்சி சார்பில் யாரும் உறுதி செய்ய மறுத்து வருகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக