செவ்வாய், 11 டிசம்பர், 2012

மன்சூர் அலிகானுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு. சென்னை உயர்நீதிமன்றம்

தன்னை கற்பழித்துவிட்டதாக பொய் புகார் கொடுத்த பெண், நடிகர் மன்சூர் அலிகானுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான், மயக்க மருந்து கொடுத்த கற்பழித்துவிட்டதாகவும், இதனால் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி வடபழனியை சேர்ந்த சினேகா சர்மா என்ற பெண் கடந்த 1998 ஆம் ஆண்டு கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து செசன்சு கோர்ட்டு 27.3.2001 அன்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் சிநேகா சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, “செசன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ததோடு. கீழ் நீதிமன்றம் விதித்த ரூ.3 லட்சம் அபராத தொகையை சினேகா சர்மாவுக்கு வழங்க வேண்டும் என்றும், அவரது மகளுக்கு தனியாக ரூ.7 லட்சம் வழங்க வேண்டும்” என்றும் தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த அப்பீல் மனு 25.2.2008 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் சினேகா சர்மாவை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று அவரது கணவர் சிவ் சுரேஷ் மிஸ்ரா என்பவர் சென்னை குடும்பநல கோர்ட்டில் 1995-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
அதில், சிவ்சுரேஷ் மிஸ்ராவுடன் சினேகா சர்மாவுக்கு 24.8.1994 அன்று திருமணம் நடந்திருப்பதையும், அவருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டிருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் மன்சூர் அலிகான் தன்னை கற்பழித்து விட்டதாகவும், அதற்கு முன்பு அவர் வேறு யாருடனும் செக்ஸ் உறவு வைக்க வில்லை என்றும் கோர்ட்டில் சாட்சியம் அளித்துள்ளார்.
இதனையடுத்து தன் மீதான பொய் புகார் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்தார். அதில்,
சமுதாயத்தில் எனக்கு இருந்த நற்பெயரை சீரழிக்க வேண்டும் என்பதற்காக சினேகா சர்மா இப்படி ஒரு கற்பழிப்பு பொய் புகாரை எனக்கு எதிராக கொடுத்துள்ளார். இதனால் நான் எந்த தவறையும் செய்யாமல், ஜெயில் தண்டனை அனுபவித்துள்ளேன். சமுதாயத்தில் மட்டுமல்லாமல், என் குடும்பத்தினர் மத்தியிலும் எனக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. என் நடிப்பு தொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டது. என்னுடைய நற்பெயரை கெடுத்தது, என் குடும்பத்தின் சந்தோஷத்தை கெடுத்தது, மனஉளைச்சல் ஆகியவைக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க சினேகா சர்மாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ரூ 50 லட்சம் இழப்பீடு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.மதிவாணன் தனது தீர்ப்பில் கூறியதாவது:
மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி, சினேகா சர்மாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் கோர்ட்டுக்கு நேரில் ஆஜராகவோ அல்லது வக்கீல் மூலம் தன் கருத்தை தெரிவிக்கவோ இல்லை. எனவே மனுதாரரின் வாதம், அதற்கான சாட்சி ஆகியவைகளை பரிசீலித்தபோது, மன்சூர் அலிகான் இந்த வழக்கில் கோரியுள்ள கோரிக்கையை நிரூபித்துள்ளார். எனவே அவர் கோரியபடி, மன்சூர் அலிகானுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சினேகா சர்மாவுக்கு உத்தரவிடுகிறேன் என்று தீர்ப்பளித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக