சனி, 23 நவம்பர், 2013

தம்பி - அக்கா பாசம் மெய்யழகி



நீண்ட இடைவெளிக்குப் பிறகு தம்பி - அக்கா பாச செண்டிமெண்டை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் வெளியாகியிருக்கும் படம் தான் 'மெய்யழகி'.

ஊனமுற்ற தம்பியை, தாயை விடவும் மேலாக பாசம் காட்டி பார்த்துகொள்கிறார் ஜெய்குவேதனி. குடிகார அப்பாவல் எந்தவித உதவியும் இல்லை என்றாலும், அவ்வபோது சில உபத்திரம் வந்தாலும், அவற்றையும் சமாளித்து தனது தம்பிக்காக வாழும் ஜெய்குவேதனி, தனது திருமணத்திற்குப் பிறகும் தனது தம்பி தன்னுடன் தான் இருப்பான் என்ற நிபந்தனையினால் அவரைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில், அந்த ஊர் பெரிய மனிதரான  அருண்மொழி வர்மன், ஜெய்குவேதனி மீது ஆசைப்படுகிறார். அவரை அடைய, தனது மனைவியின் ஜோசிய நம்பிக்கையை பயன்படுத்துகிறார். ஆனால், ஊர் பெரியவரின் ஆசைக்கு மறுப்பு தெரிவிக்கும் ஜெய்குவேதனி, இதில் இருந்து தப்பிக்க அதே ஊரில் உள்ள அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்.

ஆனால், ஜெய்குவேதனியின் தந்தையை தன்னுடன் சேர்த்துக்கொண்டு, ஜோசியத்தை நம்பும் தனது மனைவியையும் ஏமாற்றி ஜெய்குவேதனியை திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கும் ஊர் பெரிய மனிதர் அருண்மொழி வர்மன், தொடர்ந்து ஜெகுவேதனிக்கு தொல்லை கொடுத்து வருகிறார். இறுதியில் ஊர் பெரிய மனிதரின் தொல்லையில் இருந்து ஜெய்குவேதனி விடுபட்டு தான் ஆசைப்பட்டது போல் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொண்டாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

மெய்யழகி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜெய்குவேதனியின் பெயர் தமிழ்நாட்டுக்கு சம்மந்தம் இல்லாமல் இருந்தாலும், தமிழக கிராமத்து பெண்ணாக ரொம்ப நன்றாகவே நடித்துள்ளார்.
ஊனமுற்ற கதாபாத்திரத்தில், நாயகியின் தம்பியாக நடித்துள்ள பாலாஜியின் நடிப்பு பிரமாதம். சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தனது நடிப்புடன் நகைச்சுவையை சேர்த்து ரசிகர்களை கவர்ந்த பாலாஜி, இந்த படத்தில் முற்றிலும் புதிய முயற்சியாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். இவருக்கு

உண்மையிலேயே இதுபோல பாதிப்பு இருக்கிறதா! என்று ஆச்சரியப்படும் அளவுக்கு தனது கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்திருக்கும் பாலாஜியின் நடிப்புக்கு பல முறை பலே சொல்லலாம்.
வில்லனாக நடித்துள்ள அருண்மொழி வர்மன், ஜெய்குவேதனியின் அப்பாவாக நடித்துள்ள 'அவன் - இவன்' ராம்ராஜ் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

எஸ்.பி.அபிஷேக்கின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைந்துள்ளது. வெங்கடேஷ் அர்ஜுனின் ஒளிப்பதிவு கதையின் போக்கை திசை திருப்பாமல் பயணிக்க வைத்துள்ளது.

ஊனமுற்ற தம்பி, அவருக்காக உருகும் அக்கா என்று தமிழ் சினிமா மறந்த செண்டிமெண்ட் சமாச்சாரத்தை மீண்டும் ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்தியுள்ளார் இப்படத்தின் இயக்குநர் ஆர்.டி.ஜெயவேல்.]

0 கருத்துகள்:

கருத்துரையிடுக