மது குடிப்பதால், குடிப்பவர்களுக்கு மட்டும் அல்லாமல், அவர்களால் மற்றவர்களுக்கும் தீமை ஏற்படுகிறது என்பதை நகைச்சுவையாக சொல்ல முயட்சித்துள்ளார் இயக்குநர் கோகுல்.
விஜய் சேதுபதி, அஷ்வின், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் அவருடைய நண்பர், சரவணன் ஆகிய ஐந்து கதாபாத்திரங்களை வைத்து குடி, தான் குடியை மட்டும் அல்ல, மற்றவர்களின் குடியையும் சேர்த்து கெடுக்கும் என்ற மெசஜ் சொல்லப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட ஐந்து கதாபாத்திரங்களும் எப்போதும் குடித்துக்கொண்டே இருப்பவர்கள். இவர்கள் குடிப்பதில் ஒரே மாதிரிதான் என்றாலும், இவர்கள் குடிக்கும் ஆள்கஹாலும் , குடிக்கும் முறையும், இவர்களுடைய வாழ்க்கை முறையும் ஒருவருக்கொருவர் முரண்பாடாக உள்ளது.
இதற்கிடையில் இந்த கதாபாத்திரங்கள் ஒரு பிரச்சனையின் மூலம் ஒரு இடத்தில் சந்திக்க நேரிடுகிறது. அது என்ன பிரச்னை, அதன் மூலம் யார் யார், எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் கதை.
டாஸ்மாக்கில் குடிக்கும் ஐந்து கதாபாத்திரங்களைப் பார்த்து இவர்கள் ஏன் குடிக்கிறார்கள்? இவர்களுடைய பின்னணி என்னவாக இருக்கும்? இதனால் இவர்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட்டால் என்னவாகும்? என்று இயக்குனர் கோகுல் யோசித்து இந்த படத்தின் திரைக்கதையை எழுதியிக்கிறார் போலயிருக்கிறது. படத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களின் பின்னணியை வைத்துகொண்டு இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.
தொடர் வெற்றிகளை கொடுத்துவரும் விஜய் சேதுபதிக்கு இந்த படம், கதாபாத்திரம் வரிசையில் அடுத்த கட்டமாக அமைந்துள்ளது. அமைதியான முறையில் நடிப்பை வெளிப்படுத்தி வந்த விஜய் சேதுபதி, இந்த படத்தில் மற்றவர்களை கலாய்த்துக்கொண்டு, சென்னை லோக்கல் இளைஞர் கதாபாத்திரத்தில் மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார்.
மங்காத்தா படத்தில் நான்கு பேரில் ஒருவராக நடித்த அஷ்வினுக்கு இப்படம் நல்ல முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. ஒரு பக்கம் மார்கெட்டிங் வேலை, மறுபக்கம் காதலியின் டார்ச்சர் என்று தனது நிலையை ரொம்ப எதார்த்தமாக தனது கதாபாத்திரத்தில் விவரித்துள்ளார்.
நந்திதா, சுவாதி என்று இரண்டு ஹீரோயின்களும் தங்களது பணியை ரொம்ப நிறைவாகவே செய்துள்ளார்கள். நந்திதா, எப்போதும் போல ஓவர் மேக்கப் இல்லாமல், எதார்த்தமாக ஜொலிக்கிறார்.
சுவாதிதான், முதல் படத்தில் பார்த்ததற்கும், இந்த படத்தில் பார்ப்பதற்கும் ரொம்பவே வித்தியாசமாக தோன்றுகிறார். ஒரு பக்கம் பார்த்தால் நல்லாத்தான் இருக்கு பொண்ணு என்று தோன்றுகிறது,
மறுபக்கம் பார்த்தால், என்னடா மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விட்டாரா என்று தோன்றுகிறது.
நான் கடவுள் ராஜேந்திரன், வில்லனாகவும் பயமுறுத்துகிறார். காமெடியனாகவும் சிரிக்க வைக்கிறார். அவருடன் பட்டி பாபு என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகரும், மனதில் நிற்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பசுபதி, இந்த படத்தில் நடித்துள்ளதால் ரசிகர்களுக்கு அவருடைய கதாபாத்திரம் மீது ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்தது, ஆனால், படம் பார்த்த பிறகு அது புஸ்பானமாகிவிட்டது.(இந்த கதாபாத்திரத்திற்காகவா இவ்வளவு நாட்கள் காத்திருந்தாய் பாலகுமாரா)
சூரி, ஒரு கல் ஒரு கண்ணாடி அர்ச்சனா, எம்.எஸ்.பாஸ்கர், விஜய் சேதுபதியின் நண்பராக நடித்துள்ள அந்த புது இளைஞர் என்று அனைவரும் நன்றாகவே நடித்துள்ளனர்.
அறிமுக இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்று இருந்தாலும், எதுவும் மனதில் நிற்கவில்லை. அந்த பிரேயர் பாடல் மட்டும் காதல் தோல்வி இளைஞர்களுக்கு உற்சாக டானிக்காக அமையும்.
முதல் படத்தில் சீரியஸான ஆக்ஷன் படம் எடுத்த இயக்குனர் கோகுல், தனது இரண்டாவது படத்தில் சீரியஸான கருவை எடுத்துக்கொண்டு அதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்.
க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு, கொலை குற்றவாளிகள் போலீசாரிடம் சிக்கும் விதம், அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் உள்ளிட்டவை படத்தை கொஞ்சம் விறுவிறுப்படைய செய்கிறது. அதே சமயம், முதல் பாதியில் இயக்குனரும், படத்தொகுப்பாளரும் ரொம்பவே குழம்பி, படம் பார்ப்பவர்களையும் குழப்பிவிடுகிறார்கள்.
காட்சிகள் தான் இப்படி என்றால், அஷ்வின், சுவாதி இடம் பெறும் ஒரு பாடலை இயக்குனர் ஜப்பானில் படம் பிடித்துள்ளாராம். அதை சொன்னால் தான் ஜப்பான் என்று தெரியும், மற்றபடி பார்த்தால் அதை வெளிநாடு என்றெ தெரிந்துகொள்ள முடியவில்லை. படத்தின் பிரமாண்டத்திற்கு செலவு செய்வது தப்பில்லை, அந்த பிரமாண்டத்தை திரையில் காண்பித்திருக்க வேண்டும், இயக்குனர் அதையும் செய்யவில்லை (பேசாம, அந்த பாடலை, நம்ம செம்மொழிப் பூங்காவில் படமாக்கியிருக்கலாம்.)
முக்கியமான, நாட்டுக்கு தேவையான கருத்தை, ரொம்பவே ஜாலியாகவும், அதே சமயம் வித்தியாசமாகவும் சொல்ல முயற்சித்த இயக்குனர், அதை சொன்ன விதத்திலும், காட்சியை நகர்த்திய விதத்திலும் கோட்டை விட்டுவிட்டார்.
கதாபாத்திரங்களின் தோற்றத்திலும், அவர்களிடம் நடிப்பை வாங்குவதற்கும் முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர், அவற்றை ரசிகர்களுக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்பதில் சறுக்கிவிட்டார்.
படத்தில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரத்திற்கு, சுமார் மூச்சி குமாரு, என்று பெயர் வைத்த இயக்குனர், படத்தையும் சுமாராகவே எடுத்துவிட்டார். ஆனாலும் பார்க்க வேண்டிய படம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக