சனி, 23 நவம்பர், 2013

தமிழ் சினிமா இரண்டாம் உலகம்


 இன்னும் 25 வருடங்களுக்குப் பிறகு பார்க்க வேண்டிய படத்தை இயக்குநர் செல்வராகவன், இப்போதே காண்பித்திருக்கிறார். அவருடைய கற்பனையும், தேடலும் இவ்வுலகத்தையும் கடந்து அவரை வேறு ஒரு உலகத்திற்கு பயணிக்க வைத்திருக்கும் படம் தான் 'இரண்டாம் உலகம்'.
இந்த பிரபஞ்சத்தில் பூமி மட்டும் இன்றி இன்னும் பல உலகங்கள் இருப்பதாகவும், அவற்றில் நம்மைப் போன்றே மனிதர்கள் வாழ்வதாகவும், படம் ஆரம்பிக்கும்போதே சொல்கிறார்கள்.
அதன்படி, பூமியில் மருத்துவரான அனுஷ்கா, ஆர்யாவை காதலிக்கிறார். முதலில் அனுஷ்கா காதலுக்கு நோ சொல்லும் ஆர்யா, பிறகு அனுஷ்கா இல்லை என்றால் தான் இல்லை என்ற நிலையில் அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். அதே நேரத்தில், காதல் என்றால் என்ன என்று தெரியாத வேறு ஒரு உலகத்தில் வாழும் ஆர்யா, அனுஷ்காவை காதலிக்கிறார். அதற்கு எந்தவித ரியாக்ஷனும் கொடுக்காத அந்த அனுஷ்கா, எப்போதும் கத்தியும், சண்டையுமாக அலைகிறார்.
பூமியில் உள்ள அனுஷ்கா - ஆர்யா ஜோடி ஒரு வழியாக காதலிக்க தொடங்குகிறார்கள். தங்கள் காதலில் முழுமை அடையும் நேரத்தில் அனுஷ்கா மரணம் அடைகிறார். அதேநேரத்தில், அனுஷ்கா மரணம் அடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மரணம் அடையும் ஆர்யாவின் தந்தை, ஆர்யா முன்பு தோன்றி, இந்த உலகத்தில் யாரும் இறப்பதில்லை. தேடினால் நிச்சயம் கிடைப்பார்கள் என்று கூறிவிட்டு மறைகிறார். அதன்படி அனுஷ்காவின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு அவரை ஆர்யா தேடும் முயற்சியில் இறங்குகிறார்.
இந்த நிலையில், ஏதோ மாயம் மந்திரம் நடந்ததுபோல ஆர்யாவின் வாழ்வில் திடீர் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. பிறகு ஆர்யா கண் விழித்துப்பார்க்கும் போது அவர் வேறு ஒரு உலகத்தில் இருக்கிறார். அந்த உலகத்தில் மற்றொரு ஆர்யா, மற்றொரு அனுஷ்கா என இருக்கிறார்கள்.
காதல் என்றால் என்ன என்று தெரியாத அந்த உலகத்தில் வெட்டு குத்து என்று வாழும் மனிதர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு, சந்தோஷம் ஏற்பட வேண்டும் என்று அந்த உலகத்தின் கடவுள் நினைக்கிறார். அதன்படியே, அந்த உலகத்திற்கு காதல் என்றால் என்ன என்பதை கற்றுக்கொடுக்கும் வேலையை பூமியில் இருந்து சென்ற ஆர்யா மேற்கொள்ள, இறுதியில் அவர்கள் காதலை கற்றுக்கொண்டார்களா? அதன்பிறகு நடந்தது என்ன என்ற ரீதியில் படம் பயணிக்கிறது.
செல்வராகவன் பாணி படம் இல்லையே! என்று நாம் கவலைப்பட்டால், "ஒரே மாதிரி படம் எடுக்க சொல்லாதீர்கள்" என்று செல்வராகவன் கவலைப்படுவார். அதனால், செல்வாவை தவிர்த்துவிட்டு படம் எப்படி என்பதை மட்டும் பார்ப்போம்.
ஹாலிவுட் ஜேம்ஸ் கேமரூன் எடுத்தால் மட்டும் ஆஹா... ஒஹோ... என்று ரசிக்கும் தமிழ் ரசிகர்கள் நம்ம, தமிழ் நாட்டு இயக்குநர் எடுத்த இதுபோன்ற படத்தை மட்டும் ஏன் ரசிக்க யோசிக்கிறார்கள். பொதுவாக இதுபோன்ற கிராபிக்ஸ் படங்கள் என்றால், அதில் திரைக்கதையும், காட்சியும் விறுவிறுப்பாக இருக்க வேண்டும். இங்கு அதிலேயே மிகப்பெரிய ஓட்டை. என்ன தான் வித்தியாசமான முயற்சியில் செல்வா, இரங்கினாலும், காதல் என்ற கருவை மட்டும் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த காதலைக் கொண்டே இரண்டு உலகங்களையும் ஒன்றாக இணைக்கிறார். அப்படி அவர் இணைக்கும் போது நடக்கும் சம்பவங்கள், ஒரு கற்பனை படத்திற்கு ஏற்றவாறு இருந்தாலும், அதை சொல்லும் விதமும், மற்றொரு உலகத்தில் நடைபெறும் சம்பவங்களும் வெறும் சப்பைக்கட்டுக்களாகவே உள்ளது.
கிராபிக்ஸ் கதாபாத்திரங்களை நடிக்க வைத்த அளவுக்கு கூட இதில், ஆர்யாவையும், அனுஷ்காவையும் நடிக்க வைக்கவில்லை. அனுஷ்கா, அவ்வப்போது முறைப்பது, கோபப்படுவது, சண்டைப்போடுவது என்று திரிகிறார்.
ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும், அனிருத்தின் பின்னணி இசையும் சிறிதளவு கூட எடுபடவில்லை. இதில், செல்வராகவன் ஸ்டைலில் ஒரு காதல் தோல்வி பாடல் வேற (எந்த உலகத்திற்கு சென்றாலும் நம்ம தமிழ் இயக்குநர்கள் ஐட்டம் பாடலை விடமாட்டார்கள் போல...)
கிராபிக்ஸ் வண்ணங்களில் ஒளிந்திக்கொண்டு அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ராம்ஜியின் கேமரா பணி நன்றாக உள்ளது. அதே சமயத்தில், எடிட்டரின் கத்தரி போட்ட வெட்டு எக்குதப்பாக அமைந்துள்ளது.
சிறிய கரு தான், என்றாலும் அதை சொல்லும் விதத்தில் இயக்குநர் செல்வராகவனின் ஆரம்ப கால படங்கள் சபாஷ் போட வைத்தன. தன்னை மாற்றிக்கொள்ள நினைத்த செல்வராகவன், தன்னிடம் இருந்த கதை சொல்லும் திறனையும் மாற்றிக்கொண்டு பறிதவிப்பது இப்படத்தில் ரொம்ப நன்றாகவே தெரிகிறது.
தமிழ் சினிமாவில் இதுபோன்ற படங்கள் வருவது வரவேற்க தக்க ஒன்றுதான் என்றாலும், அதை சரியான முறையில் சொல்லப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பேண்டசி என்று சொல்லக்கூடிய மாயாஜாலப் படங்களில் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது என்றாலும், அவற்றை சொல்லும் விதத்தில் சிறிது லாஜிக்கை கடைபிடித்து, திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருந்தால் இந்த இரண்டாம் உலகத்தில் ரசிகர்களும் பயணிக்க ஆசைப்பட்டிருப்பார்கள்.
இயக்குநர் செல்வராகவனின் கனவை நினவாக்க, தயாரிப்பாளர் ரூ.50 கோடி செலவு செய்திருக்கிறார் என்ற ஒரு செய்தியை காட்டிலும், இப்படத்தில் சொல்லக்கூடிய ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக