வெள்ளி, 15 நவம்பர், 2013

விஷ்வரூப அனுபவம்

" வணக்கம் நண்பர்களே!
 உங்களுக்குகாக தான் காத்துக்கிடக்கின்றன  படைப்புகளை படியுங்கள். ""தங்கள் வருகைக்கு மிக்க நன்றி""

இருபத்தி நான்கு இஸ்லாமிய கூட்டமைப்புகளின் எதிர்ப்பால் கமலின் விஷ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படாமல் இருக்கிறது. உயர்நீதிமன்றம் தடை நீக்கம், தமிழக அரசு தடை என நாளுக்கு நாள் விஷ்வரூபமாகி வரும் திரைப்பட பிரட்சனை என்றாவது முடிந்து

தமிழகத்தில் திரையிடப்படும் என்ற நம்பிக்கை குறைந்து வரும் வேளையில் ஆந்திர தமிழக எல்லையில் வசித்துவரும் அலுவலக நண்பர் ஒருவர் தமிழில் விஷ்வரூபத்தினை பார்த்தாக கூறினார். அலுவலகத்தில் இருக்கும் அனைவரும் அவருடன் பேசி அவ்விடம் ஆந்திர தமிழக எல்லையில் இருக்கும் சத்தியவேடு என்ற கிராமம் என்று அறிந்தோம்.

ஒரு திரைப்படத்தினைப் பார்க்க மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டாமென காத்திருந்த போது, இஸ்லாமிய அமைப்புகளை சமரசம் செய்ய சில காட்சிகளை நீக்கி வெளியிட கமல் தரப்பு சம்மதித்தாக செய்தி வந்தது. அரைமணி நேரக் காட்சிகள் நீக்கப்படலாம் என்ற யூகத்தினை செய்திதாள்கள் வெளியிட்டன. முழுவதுமாக பார்க்க வாய்ப்பு இருக்கும்

போது, அரை குறை திரைப்படத்தினை அதுவும் பல நாட்கள் காத்திருந்து பார்க்க வேண்டாமென முடிவு செய்து சென்ற சனிக்கிழமை கிளம்பினோம். மேனேஜிங் டைரக்டர் வாங்கிய புதிய காரில் எங்கள் பயணம் தொடங்கியது.
சத்தியவேடு கிராமத்திற்கு இதற்கு முன்பே சக அலுவலரின் திருமணத்திற்கு சென்றுள்ளோம் என்பதால், எவ்வித இடையூருமின்றி எங்களால்

கிராமத்தினை அடைய முடிந்தது. ஆனால் சிற்சில சாலை அமைக்கும் பணிகளால் கரடுமுரடான சாலையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புதுப்பாதையில் வெங்கடேஷ்வரா திரையரங்கத்திற்கான வழியை சிலரிடம் கேட்டு தெரிந்து கொண்டு பயணித்தோம். வழியில் ஒரு

பெண்ணிடம் விவரம் கேட்க அடக்க இயலா சிரிப்போடு வழிகாட்டினார். அந்த சிரிப்பின் பின்னனியில் உள்ளதை அறிய ஆவல் உண்டாயிற்று, ஏன் இப்படி சிரிக்கின்றீர்கள் என்றோம், இதுவரை பலருக்கும் வழிகாட்டியாக இங்கு நிற்பதாகவும், யாருமே பயணப்படாத சாலையில் இன்று பெரும் வாகனங்கள் பயணப்படுவதை எண்ணி சிரிப்பதாகவும் கூறினார். எங்களுக்கு முன் ஒரு அம்பாசிட்டர் மறைந்து கொண்டிருந்தது.

வழிநெடுகிலும் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், நாங்கள் திரையரங்கத்தினை நெருங்கிவிட்டோம் என்று கூறின. திரையரங்கத்தின் முகப்பில் ஏகப்பட்ட இருசக்ர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. சனிக்கிழமை என்பதால் நாங்கள் எதிர்ப்பார்த்தை விட ரசிகசிகாமணிகள் அதிகமாகவே இருந்தார்கள். தெலுங்கில் எழுதப்பட்டிருந்த திரையரங்கத்தின் பெயர், எண்ணற்ற தமிழ் ரசிகர்களை பார்த்து மகிழந்து கொண்டிருந்தது. நீண்டு வளைந்து சென்ற வரிசையின் இறுதியில் நான் நின்று கொண்டேன். ஆந்திரா நண்பர்

திரையரங்கில் தெரிந்தவர்களை இனம் கண்டு மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் டிக்கெட் கொடுக்குமிடத்திற்கு விரைந்தார்கள். சாலையில் செல்லும் உள்ளூர் வாசிகள், நம்மூர் திரையரங்குதானா என்று வியந்தபடியும், ரசிக கோமாளிகளை எண்ணி நகைத்தபடியும் சென்றார்கள்.

எனக்கு முன் எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்கள் சிலர் நின்றிருந்தார்கள். அவர்கள் பதினாறு பேர் ஒன்றாக வந்ததாகவும், இவர்களின்றி மேலும் இருவர் தற்போது ஓடுகின்ற காட்சியை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்கள். எனக்குப் பின் பிளாக்கில் டிக்கெட்டுகளை விக்கும் சிறுவன் ஒருவன்

நின்றிருந்தான். முதலாவதாக நின்றிருந்த தன்னை நண்பர்கள் கலாட்டகள் செய்து இடத்தினை பிடுங்கிக் கொண்டதாக கூறி அவர்களை வசைபாடிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னே ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்கவர் தன் இருபது வயதுகளில் சகலகலா வல்வன் படத்திற்காக மூன்று முறை திரையரங்கம் சென்று நான்காவது முறைதான் பார்த்தாக அனுபவங்களை பிறரிடம் கூறிக் கொண்டிருந்தார்.

எங்களுக்கெல்லாம் பின்னார் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் டிக்கெட் கிடைச்சிடுச்சு என்று மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டார்கள். அனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்க தரகர்கள் மூலம் கிடைத்தாக கூறி சென்றார்கள். அவர்கள் பின்னே சிலர் தகரை அறிமுகம் செய்துவைக்கும்படி

கோரிக்கையோடு சென்றார்கள். ஆறு ரூபாய் டிக்கெட் ஐம்பது ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், ஐம்பது ரூபாய் டிக்கெட்டை கள்ளத்தனமாய் இருநூறு ரூபாய் வரை விற்றார்கள். சிறி்து நேரத்தில் டிக்கெட் கொடுக்குமிடத்தில் முட்டி மோதி எனக்கும் சேர்த்து வாங்கிவந்தார்கள் நண்பர்கள். ஏகப்பட்ட தள்ளுமுள்ளுகளுக்குப் பிறகு அரங்கில் நுழைந்தோம். முன்னூற்று ஐம்பது நபர்களுக்கான அரங்கில் ஐநூறுக்கும் மேற்ப்பட்டவர்கள் நுழைந்தமையால், பலர் நின்றபடி படம் பார்க்கத் தொடங்கினர். அமரச் சொல்லி

அமர்ந்திருப்பவர்களும், நின்று பார்க்கச் சொல்லி நின்றிருப்பவர்கள் கூச்சலிட்டனர். எல்லாம் படம் தொடங்கும் வரைத்தான்.
விஷ்வரூபம் -
விஷ்வரூபம்
விஷ்வரூபம்
அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அணு ஆயுதம் மூலம் அழிவை ஏற்படுத்த முற்படுகின்றார்கள். அதை இந்தியாவிலிருந்து செல்லும் ஒரு முஸ்லிம் எப்படி அறிந்து கொள்கிறான், அவன் மனைவியான பிராமணப்பெண்ணுடன் இணைந்து எப்படி அதை முறியடிக்கிறான் என்பதே விஷ்வரூபத்தின் கதை. அமெரிக்காவில் தமிழ்பேசும் மாணவிகளுக்கு பரதம் சொல்லிதரும் குருவாக அறிமுகமாகிறார் கமலஹாசன். தமிழ்திரையின் சித்தாந்தப்படி நடனத்தின் நளினங்களால் பாதிக்கப்பட்டு பெண்

அசைவுகளுக்குள் சிக்குண்டவராக வலம்வருகிறார். பரதத்தினை கற்றுக் கொள்ளும் ஆண்மகனெல்லாம் மகள்களாக மாறிவிடுவார்களோ என்ற அச்சம் கொள்ளும் அளவுக்கு நடையிலும், ஓட்டத்திலும் நளினம் காட்டியபடி

இருக்கிறார். கமல் மனைவியான பூஜா குமார் உளவுபார்க்கும் ஆள்மூலம் தன் கணவன் முஸ்லிம் என்ற உண்மையை அறிகிறார். அதை அவரின் பாய் பிரண்டிடம் கூற, ஜிகாத்திகள் கதைக்குள் பிரவேசிக்கின்றார்கள். கமலையும், பூஜாவையும் அவர்கள் ஒளிந்திருக்கும் இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள். இடையே ஜிகாத்திகளின் தலைவனாக வருகின்ற ராகுல் போஸ் பூஜாவின் பாய் பிரண்டை கொல்லவும், கமலை உயிரோடு பிடித்து வைத்திருக்கவும் கூறி அவ்விடத்திற்கு புறப்படுகிறார். அதற்குள் கமலும் பூஜாவும்

தீவிரவாதிகளிடமிருந்து தப்புகிறார்கள். ராகுல் போஸ் மிரட்டும் பார்வையும், மெல்லிய பேச்சும் புதிய வில்லனாக காட்டுகிறது.
ஆப்கானிஸ்தானில் ராகுல் போஸிடம் கமல் இணைவதும், போராளிகளுக்கு பயிற்சி கொடுப்பதும், குடும்பத்தினருடன் நன்றாக பழகுவதுமாக விரிகிறது

பிளாஸ்பேக். தீவிரவாதத்தின் பின்னனியில் இருக்கும் குடும்ப உறவுகளின் வலிகளையும், ஆப்கானின் தினசர் வாழ்வினையும் தொட்டு செல்கிறது படம். ராகுல் போஸின் மனைவிக்கு மருத்துவம் பார்க்க வருவபவளை இஸ்லாமியர்களைப் போல உடை அணியச் சொல்வதும், மருத்துவச்சி போல நடித்து அவர் பிள்ளை சந்தோசம் கொள்வதும் யதார்த்தங்களின் கலவை. அமெரிக்கர்களின் தாக்குதல்களும், அமெரிக்கர்களை கொல்வதினையும் கடந்து ராகுல் போஸின் நியூயார்க் நகரை தாக்கும் தந்திரம் கமலுக்கு

தெரியவருகிறது. அதைத் தடுக்க கமல் போராடுவதே மீதமிருக்கும் கதை. இறுதியாக நியூக்கிளியார் டாக்டரேட்டான பூஜாவின் உதவியால் சுபமாக முடிந்தாலும், கமல் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியதும், வில்லன் ராகுல் போஸ் மிச்சமிருப்பதும் விஷ்வரூபத்தின் இரண்டாவது பாகத்திற்கான வழிவகைகளோடு சின்ன டிரைலர் தந்து படம் முடிகிறது. ஆன்ட்ரியா, நாசர் போன்றவர்கள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அடுத்த பாகத்தில் கதாப்பாத்திரத்தின் வலு கூடினால் பார்க்கலாம்.

என் பாட்டன்மார்களெல்லாம் கூத்து பார்க்க வண்டிக்கட்டி போனதைப் பற்றி கேள்வியுற்றிருக்கிறேன். தூரங்களை மதியாமல், கலைஞர்களை மதித்து சென்ற அந்த பயணங்கள் முடிந்துவிடவில்லை. அருகே ஆயிரம் திரையரங்குகள் இருந்தும், ஆந்திராவின் எல்லைக்கு எங்களையெல்லாம் படையெடுக்க வைத்தமைக்காக இசுலாமிய அமைப்புகளுக்கும், இங்கிருக்கும் அரசிற்கும் தான் நன்றி கூற வேண்டும். இல்லையென்றால் இப்படியொரு அனுபவம் என்வாழ்வில் நிகழ்ந்திருக்காது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக