நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு படகுக் குழு ( rowing team from Groningen, Netherlands ) “Why this Kolaveri Di?” என்ற தமிழ்ப்பட பாடலுக்கு அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்கள். இதில் இவர்கள் எப்படி பெண்ணைக் கையாள்கிறார்கள் என்று பாருங்கள்.
அதே சமயம் இந்தப்படத்தின் அதிகாரபூர்வமான பாடலில் பெண்கள் (வெளிநாட்டுப் பெண்களும் உண்டு) எப்படி கையாளப்படுகிறார்கள் என்றும் பாருங்கள்.
இப்படி ஆணையும் பெண்ணையும் பிரித்து வைத்து , புணருவதை நோக்கிய மிருகமாகவே ஆண்கள் தயார் செய்யப்படுகிறார்கள் நமது சமுதாயத்தில் என்பது என் எண்ணம். திருமணமே பெண்ணின் அருகாமைக்கான ஒரே வழி என்றே இன்னும் உள்ளது. காமம் வேறு , காதல் வேறு என்பது புரியவில்லை. சளிக்காமல் உடலுறவு கொண்டாலும் , அதைத்தாண்டி காதல் வேண்டும் என்னை மணந்துகொள் என்று சொல்லும் ஆண்களையும் காட்டும் படங்கள் உண்டு மேற்குலகில். ஆனால் பெண்ணிடம் உடல் சார்ந்த உறவே , ஆண் பெண் உறவின் உட்சம் என்பதுபோலத்தான் நம் சமுதாயம் உள்ளது.swim_saree
ஈவ் டீசிங் பாடல்களை எந்த புரிதலும் இல்லாமல் இன்றுவரை கேட்டுக்கொண்டுள்ளோம், ஆனால் சின்னச் சின்ன ஆண் பெண் அணைத்தலைக்கூட கொலைக்குற்றமாகப் பார்க்கிறோம். சேலை கட்டிக்கொண்டு வக்கிரமாக ஆடுவதை குடும்பத்துடன் இரசிக்கும் நாம், மேலை நாட்டுப் பெண்கள் பிகினியில் குளித்தால்கூட அவர்களின் கலாச்சாரத்தை
கேலிசெய்கிறோம். மேற்குலகில் குற்றமே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உடல் விரட்டல் இப்படி இல்லை என்று என்னால் சொல்லமுடியும். பிகினியோடு ஒரு பெண் என்னருகில் வந்தால் அது இயல்பாய் இருக்கிறது. உடல் ஈர்ப்பு என்பது (வெறி) முதன்மை இல்லை.
முன் அறிமுகம் இல்லாத பெண்களுடன் எனது அனுபவம் (பல பதிவுகளில் நான் ஏற்கனவே சொல்லியுள்ளது)
நேரடியான பேச்சுக்கள் மனத்தடைகளைக் குறைக்கும். Life Guard இல்லாத நீச்சல் குளங்களில், பாதுகாப்பு காரணக்களுக்காக தனியாக ஒருவர் மட்டும் இருக்க அனுமதியில்லை. மிகச்சாதரணமாக ,பிகினி உடையுடன் என்னிடம் வந்து “தனியாக நீச்சல் அடிக்கிறேன் , கொஞ்ச நேரம் எனக்காக இங்கேயே இருக்க முடியுமா” என்று ,என்றுமே பார்த்துப் பேசியிராத ஒரு அறிமுகம் இல்லாத, வெளிநாட்டுப்பெண் நேரிடையாக கேட்டதுண்டு.
டில்லியில் இருந்து ரிசிகேஷ்,ஹரித்துவார் போன்ற வரலாற்றுச் சிறப்பும் ,இயற்கையின் கொடையுமாக உள்ள இடங்களுக்கு பயணம் சென்றபோது , ஒரு இளம் தம்பதியினர் எனக்கு அறிமுகமானார்கள். அவர்கள் ஒருவயதில் குழந்தையுடன் வந்திருந்தார்கள். பஸ்பயண நேரமே பழக்கம்.
ஹரித்துவாரில் குளித்து முடித்தபின் பெரும்பாலும் கங்கைக் கரையிலேயே உடைமாற்றல் நடக்கும். ஆண்கள் நாங்கள் இருவரும் முதலில் குளித்துவிட்டோம். நான் மட்டும் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டேன். நாங்கள் வந்தபின் குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணும் அவள் கணவனும் குளிக்கச் சென்றனர். ஆற்றின் அதிகவேகம் கருதி மனைவியின் பாதுகாப்புக்காக அந்தக் கணவன் இரண்டாவது முறைக் குளியல். இருவரும் குளித்து வந்தபின், அந்த கணவன் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டார். அந்தப் பெண் இப்போது உடை மாற்றவேண்டும்.
அவர்கள் இருவரும் என்னையும் அழைத்து ஒரு சேலையை சுற்றிப்பிடிக்கச் சொன்னார்கள். நானும் , அவளது கணவரும் சேலையை வட்டமாகச் சுற்றிப்பிடித்து வெளிப்புறமாக நோக்கியிருந்தோம். குழந்தையை நடுவில் கிடத்திவிட்டு நாங்கள் பிடித்துக்கொண்ட ‘சேலை வட்ட மறைப்புக்குள்’ வேறு புதிய உடை மாற்றினாள் அந்தப் பெண். நான் அவர்களின் குடும்ப உறுப்பினர் கிடையாது. பஸ்நேரப் பழக்கம் மட்டுமே. இது இயல்பு மற்றும் நம்பிக்கை சார்ந்த நிலை. நல்ல மனங்கள் உண்டு என்பதைச் சொல்லவே இது. மனிதனாக இருத்தலை அங்கீகரிக்க இதைவிட ஒரு அந்நியப் பெண்ணிடம் என்ன வேண்டும்?
ஐந்தாம் வகுப்பிற்குப் பிறகு உடன் படித்த பெண்களின் கையைக்கூட தொட முடியாது. இப்படி விலக்கியே வளர்க்கப்பட்ட நம் சமுதாய ஆணையும்
பெண்ணையும் சட்டென்று திருமணம் செய்து வைத்து, முதல் நாள் இரவிலேயே போய் புணருங்கள் என்று சொல்லி கதவடைத்தால் அதில் எங்கே காதல் வரும்.
காதல் என்றால் என்ன?
சின்ன வயதில் வரும் பாலியல் ஈர்ப்ப்பு என்பது வெறும் Crush. பலர் இந்த வெறும் Crush ஐ புனிதமாக கருதுவதுபோல ஒரு உருவாக்கம் தமிழகத்தில் உள்ளது. அதனாலதான் அழகான பெண்ணை தூரத்தில் இருந்து இரசிப்பதுடன் நிறுத்தாமல், ஒருதலைக்காதல் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். ஒருதலைக்காதல் என்ற ஒன்று இல்லை. அது ஆசை (Crush) மட்டும். இது ஒரு நோய்க்கூறு. அதாவது ஒருதலைக்காதல் என்பதே நோய். அப்படி ஒன்று இல்லை. அதற்குப் பெயர் ஆசை Crush . Love கிடையாது .
ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் வருவது ஆசை (Crush) , அதை எப்படி காதலாக (Love) மாற்றுவது… அதாவது அந்தப் பெண்ணை அணுகி (approach) எப்படி தன் விருப்பத்தை தெரிவித்து அந்தப்பெண் விரும்பும் பட்சத்தில் பழக ஆரம்பித்து, அதற்குப் பின்னால் திருமண விருப்பதைச் சொல்வது என்று கற்றுத்தரப்பட வேண்டும். இடையில் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அழகாகப் பிரியவும் கற்றுக்கொள்ள வேண்டும். எனது உடன் வேலை பார்க்கும் பெண் விவகாரத்துப் பெற்றவர். இன்னும் அவர் கார் நடுவழியில் பழுதாகி நின்றால் அழைப்பது அதே விவகாரத்து செய்யப்பட்ட பழைய /முன்னாள் கணவனைத்தான்.
காதலைக் கற்றுக்கொடுப்போம்.
கணுக்கால் தெரிந்தவுடன் வருவது காதல் அல்ல. அது பெண்ணுடல் பார்த்தவுடன் வரும் காமம். அதில் தவறு இல்லை. ஆனால் பார்த்தவுடன் புணரவேண்டும் அதற்கு தமிழகத்தில் ஒரே வழி கல்யாணம் என்பதால், அதைக் காதலாகக் கருதி அலையக்கூடாது. No Strings Attached (2011) என்ற படத்தில் நண்பர்களாக இருப்பவர்கள் , காமம் தாண்டி தவிப்பது, காதலுக்காக. திகட்ட திகட்ட உடலுறவு கிடைத்தாலும் அதையும் தாண்டி காதலிக்கப்பட வேண்டும் , காதலிக்க வேண்டும் என்பது தேவை என்று கதை சொல்லப்பட்டு இருக்கும். காமம் என்பது காதலைத்தூண்ட ஒரு வாசனைத் திரவியம் மேஜிக். ஆனால் காதல் என்பது புரிந்துகொள்ளல் அன்பு செலுத்துதல் ப்ரியமாய் இருத்தல் துணையாய் இருத்தல். அது உள்ளதா?
Valentine’s Day
மேலைநாடுகளில் காதலர் தினத்தில் யாருக்கு வேண்டுமானாலும் Happy Valentine’s Day என்று வாழ்த்துகள் சொல்லலாம் . அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அண்ணன், ஆசிரியர், அக்கம் பக்கம் என்று யாரும் யாருக்கு வேண்டுமானலும் வாழ்த்துகள் சொல்லலாம். அதாவது காமம் கடந்த ஒரு வழக்கமாக மாறிவிட்டது. இருந்தாலும், காமம் கலந்த காதலில் (கணவன்-மனைவி) இது புது அர்த்தம் பெறுகிறது. தமிழில் காதல் என்பது காமம் கலந்த ஒன்றைத்தவிர மற்றதற்கு பயன்படுத்த முடியாது. எனது தோழர்களிடம் உங்களைக் காதலிக்கிறேன் என்று சொன்னால் தவறாகிவிடும். சரி உங்களுடன் அன்பாகியிருக்கிறேன் என்று சொன்னாலும் ஏதோ சப்பென்று உள்ளது. என்ன சொல்லலாம்…
தமிழ் இணையைப் பயனாளர்கள் அனைவருக்கும் எனது அன்பும் ப்ரியங்களும்,{காணொளி,}
0 கருத்துகள்:
கருத்துரையிடுக