கலகலப்பும் ஆக்க்ஷனும் சேர்ந்து படம் இயக்குவதில் கெட்டிக்காரரான பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். இதிலும் அதே ஆக்க்ஷன் காமெடி கொஞ்சம் வேறு விதமான பிளேவரில் கலக்கிக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
காரைக்குடியில் சமையல்காரராக இருக்கிறார் சந்தானம். அவரிடம் சமையல் வேலைக்கு வந்து சேர்கிறார் விஷால். ஒரு ரவுடியிடம் ஏற்பட்ட பிரச்சினையில் காரைக்குடியை காலி பண்ணிட்டு திருச்சிக்கு இடம் பெயர்கிறது சந்தானம் கோஷ்டி. அங்கு போன இடத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த அறிமுகம் விஷால் மனதில் காதலை விதைக்கிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள வில்லன் ஒருவன் முயற்சிக்க இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. ஐஸ்வர்யாவை அந்த பிரச்சினையில் இருந்து விஷால் எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.
சந்தானத்தின் 2 லட்ச ரூபாய் அடங்கிய பையை தொலைத்துக் கொண்டு அதைத் தேடுவதிலேயே கால்வாசி படத்தை முடித்துவிடுகிறார்கள். படத்தின் முதல் பாதி சந்தானம் விஷால் நண்பர்களின் சேட்டையுடன் செம கலகலப்பாக நகர்கிறது. இவங்க அடிக்கிற ரகளை போதாது என்று மயில்சாமியும் இவர்களுடன் சேர்ந்து கொள்ள திரையரங்கமே சிரிப்பில் அதிர்கிறது. இடைவேளைக்குப் பிறகு படம் கதையின் ஓட்டத்தில் ஆக்க்ஷனுடன் பயணிக்கிறது.
இரண்டு லட்ச ரூபாயை வைத்திருக்கும் பையை பேருந்தில் ஒரு பெண்ணிடம் கொடுப்பது, அதை அவள் வேறு ஒருவரிடம் மாற்றிக் கொடுக்க, எந்த வித டென்ஷனும் இல்லாமல் அதை எல்லோருமாக சேர்ந்து தேடுகிறார்கள்… லாஜிக் பார்க்க ஆரம்பிச்சா ஏராளமான ஓட்டைகளைக் கண்டுபிடிக்கலாம். விஷாலும் அவர் நண்பர்களும் பணப்பையை தொலைத்த காட்சிகள் சிரிக்க வைத்தாலும் எப்படா இந்த காட்சி முடியும் என்று நினைக்க வைக்கிறது. அந்த அளவுக்கு பை சம்பந்தப்பட்ட காட்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
விஷால் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆக்க்ஷன் காட்சிகளுக்கு பிறகுதான் விஷாலின் முகத்தில் ஒரு களைகட்டியிருப்பதை கவனிக்க முடிகிறது. இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா அர்ஜூன். என்ன ஒரு என்ன ஒரு அழகியடா என்று விஷால் பாடுகிற அளவுக்கு பெரிய அழகுன்னு சொல்ல முடியலை. ஆனாலும் போகப் போக நம் மனதில் வந்து ஒட்டிக் கொள்கிறார் ஐஸ்வர்யா. விஷாலின் நண்பனாக வருகிறார் நண்டு ஜெகன். ஜாக்பாட் திருடனாக வரும் மயில்சாமிÂ கலக்கிவிட்டுப் போகிறார். கனாபாலாவின் ஒரு பாடலுக்கு மயில்சாமியை ஆடவிட்டு தூள் பண்ணியிருக்கிறார்கள். ஜான் மைக்கேல் உடன் வரும் அடிதடி ஆசாமிகளின் ரகளையால் இடைவேளைக்குப் பிறகு தியேட்டரில் அடிக்கடி எக்கச்சக்க சிரிப்பு. முக்கியமான வில்லனாக வரும் அண்ணாச்சியும் செம பெர்பாமன்ஸ். ஓரிரு காட்சியில் வரும் நெல்லைசிவா, திருடுறவன் எல்லாம் ஜென்டில்மேன்தான் என்று சொல்வதற்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. இது போன்று கலகலக்க வைக்கும் வசனங்கள் படம் முழுவதும் தொடர்ந்து வந்து சிரிக்க வைக்கின்றன.
படம் இடைவேளை தொடும் நேரத்திலும் அதன் பிறகுமே பின்னணி இசை என்ற ஒன்று படத்தில் இருப்பது தெரிகிறது. பாடல்கள் ஓகே சொல்ல வைத்தாலும் என்ன ஒரு என்ன ஒரு அழகியடா பாடல் மட்டும் செம மெலடி. ஆனாலும் சிவாஜி நடித்த எங்கள் தங்க ராஜா படத்தில் வரும் இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை என்ற பாடலின் அப்பட்டமான காப்பி. சண்டைக்காட்சிகளில் ஆன்டனி செமயாக எடிட்டிங் செய்திருக்கிறார். தேவைப்படும் இடங்களில் மட்டும் ஸ்லோ மோஷன் வைத்து சண்டைக் காட்சிகளில் சீட் நுனிக்கே வர வைக்கிறார் ஆன்டனி.
படத்தை இயக்கியிருக்கிறார் பூபதி பாண்டியன். ஏற்கனவே இவரும் விஷாலும் இணைந்து மலைக் கோட்டை படத்தை காமெடி மற்றும் ஆக்க்ஷன் கலந்து எடுத்திருந்தார்கள். இந்தப் படத்தையும் அதே போன்ற ஆக்க்ஷன் மற்றும் காமெடி சேர்த்து எடுத்திருக்கிறார் பூபதி பாண்டியன்