ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சல்மான்கான் மீது புகார் கொடுத்த தயாரிப்பாளர் கைது

டெல்லியைச் சேர்ந்த ஹர்தேவ்சிங் என்பவர் மும்பையில் சினிமா தயாரிப்பு கம்பெனி நடத்தி வருகிறார்.
டெல்லியில் டயர்கள் விற்பனை செய்யும் தொழில் செய்யும் இவர் ஒரு இந்திப்படம் தயாரித்து வருகிறார்.
இதில் நடிகர் சல்மான்கானை வைத்து ஒரே ஒரு பாடல் காட்சியில் நடிக்க வைக்க முயற்சி செய்தார்.
இதற்காக மிகப்பெரிய தொகையை சம்பளமாக சல்மான்கானின் மானேஜர் ரேஷ்மாஷெட்டி கேட்டார். இதைக் கேட்டு தயாரிப்பாளர் ஹர்தேவ்சிங் வாயடைத்துப் போனார்.

உடனே ஹர்தேவ்சிங்கின் மனைவி ஜஸ்மீத்கவுர், மகள் அமிதாசேத்தி ஆகியோர் சல்மான்கானின் மும்பை பந்தரா வீட்டின் முன் நின்று கடந்த ஆகஸ்ட் மாதம் ரகளை செய்தனர்.
இந்நிலையில் சல்மான் கானை பழிவாங்க திட்டமிட்ட தயாரிப்பாளர் ஹர்தேவ்சிங் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் திகதி டெல்லியில் துப்பாக்கி சூடு நடந்ததாக போலீசுக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

அந்த இடத்துக்கு போலீசார் விரைந்து வந்ததும் அவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தனது காரை வழி மறித்து துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் தான் காயமின்றி தப்பியதாகவும் கூறினார்.
இந்த தாக்குதலை நடத்த சல்மான் கான்தான் தூண்டியதாகவும், போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே போலீஸ் விசாரணையில் சல்மான்கானை பழிவாங்க படஅதிபர் ஹர்தேவ்சிங் பொய் புகார் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து படஅதிபர் ஹர்தேவ்சிங், அவரது மனைவி ஜஸ்மீத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக